search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்கள் மகிழ்ச்சி"

    ராமநாதபுரத்தில் நேற்று திடீரென்று பலத்த இடி மின்னலுடன் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை மிககுறைவாக பெய்ததால் கடும் வறட்சி நிலவுகிறது. நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாக குறைந்து மக்கள் குடி நீருக்காக அலைந்து திரிந்து வருகின்றனர். இதனிடையே இந்த ஆண்டு கத்தரி வெயில் எனப்படும் கோடைவெயிலுக்கு முன்னதாகவே ராமநாதபுரம் மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது.

    கோடைவெயிலுக்கு முன்னதாகவே இவ்வாறு வெளியில் தலைகாட்ட முடியாத அளவிற்கு வெயில் வாட்டிவதைத்தால் மக்கள் கோடைவெயிலை நினைத்து அச்சத்தில் இருந்தனர். மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக சுட்டெரித்த வெயிலால் சொல்ல முடியாத அவதியடைந்திருந்த மக்களுக்கு ஆறுதல் தரும் வகையில் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வுமையம் அறிவித்திருந்தது.

    இதனால் மழையை எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் நேற்று காலை ராமநாதபுரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சில நிமிடங்களில் பலத்த இடி மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. காலை 11.45 மணிஅளவில் இடைவிடாமல் சுமார் ஒரு மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது. இடி மின்னலுடன் பெய்த இந்த பலத்த மழை காரணமாக ராமநாதபுரத்தில் பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. வைசியால் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் சாய்ந்தன. நீண்ட நாட்களுக்கு பிறகு பெய்த மழை நீரை மக்கள் வீணாக்காமல் குடங்களில் பிடித்து வைத்தனர். கடந்த பல நாட்களாக மக்கள் வெயிலால் அவதியடைந்த நிலையில் திடீரென்று பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்த மழையால் நிலத்தடி நீர் ஆதாரம் உயர வாய்ப்பு மிக குறைவு என்றாலும் வெப்பக்காற்றால் பகலிலும், இரவிலும் அன்றாட வேலையை பார்க்க முடியாமல் அவதிப்பட்ட மக்களுக்கு வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    கஜா புயல் காற்றால் பல்வேறு திசைகளில் பறந்து சென்ற 50 சதவீதம் வவ்வால்கள் மீண்டும் ஆலமரத்துக்கு திரும்ப தொடங்கி உள்ளதால் நெடுவாசல் பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். #GajaCyclone #Bats
    புதுக்கோட்டை:

    கஜா புயலின் பாதிப்பு மனிதர்களை மட்டுமின்றி விலங்குகள், பறவைகளையும் கூட விட்டுவைக்கவில்லை. இயற்கை சீற்றத்தை முன் கூட்டியே அறியும் திறன் கொண்ட அவை பல இடங்களில் பலியாகியும், சில இடங்களில் மறுவாழ்வும் பெற்றுள்ளன.

    புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் வடக்கு கிராமத்தில் சுமார் 3 ஏக்கரில் சுற்றிலும் புதர்ச்செடிகள் சூழ, அதன் நடுவில் படர்ந்து விரிந்த ஆலமரம் உள்ளது. இந்த ஆலமரத்தின் கிளைகள் அனைத்திலும் ஆயிரக்கணக்கான பழம் தின்னி வவ்வால்கள் வசித்து வருகின்றன. அந்த ஆலமரத்தின் அடியில் அய்யனார் கோவில் உள்ளது.

    இந்த மரத்தில் இருந்து ஒடிந்து விழும் ஒரு குச்சியை கூட யாரும் விறகுக்காக தொடுவது இல்லை. அதே போல் இந்த மரத்தில் உள்ள வவ்வால்களை யாரும் வேட் டையாடுவதும் இல்லை. இங்கிருந்து இரை தேடி எவ்வளவு தொலைவுக்கு வவ்வால்கள் சென்றாலும் மீண்டும் இதே இடத்திற்கு வந்து விடுவது வழக்கம்.

    அதிகாலையில் இவை எழுப்பும் சப்தத்தைக் கேட்டு தான் ஊரே எழும். இந்த வவ்வால்கள் நலன் கருதி சுற்று வட்டார பகுதிகளில் பட்டாசுகளை பொதுமக்கள் வெடிப்பது கிடையாது.



    இந்நிலையில் கஜா புயலின் தாக்குதலால் இந்த ஆலமரத்தின் பெரும்பாலான கிளைகள் முறிந்து விட்டன. புயல் காற்றால் 50 சதவீதம் வவ்வால்கள் இந்த மரத்தில் இருந்து எங்கெங்கோ சென்று விட்ட நிலையில் மீதமிருந்த வவ்வால்கள் இறந்து விட்டன.

    10 நாட்கள் ஆகி சற்றே இயல்பு நிலை திரும்பியதை தொடர்ந்து பல்வேறு திசைகளில் பறந்து சென்ற வவ்வால்கள் மீண்டும் இந்த ஆலமரத்துக்கு திரும்ப தொடங்கி உள்ளன. அந்த மரத்தில் எஞ்சியுள்ள கிளைகளிலும், குச்சிகளிலும் தங்கியுள்ளன.

    இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பெண் விவசாயி ஒருவர் கூறுகையில், இம்மரத்தில் இருந்த பாதி வவ்வால்கள் புயல் காற்றால் இறந்து மரத்தடியிலேயே விழுந்து விட்டன. இங்கிருந்து வெளியேறிய சில நாட்கள் வேறு எங்கோ வசித்த வவ்வால்கள் எங்களை விட்டு பிரிய மனமில்லாமல் மீண்டும் இந்த மரத்துக்கே வந்திருப்பது பிரிந்து சென்ற சொந்தங்கள் எங்களை மீண்டும் பார்க்க வந்தது போல் மகிழ்ச்சியை அளிக்கிறது.

    அதே சமயம் புயலால் இப்பகுதியில் இருந்த பழத் தோட்டங்கள் முழுமையாக அழிந்துவிட்ட நிலையில் இந்த வவ்வால்கள் கடந்த ஒரு வாரமாக பட்டினியால் வாடுவதுதான் எங்களுக்கு வேதனை அளிக்கிறது என்றார்.  #GajaCyclone #Bats


    வாட்டி, வதைத்த வெயிலுக்கு இதமாக இன்று பிற்பகல் சென்னை நகரின் பல பகுதிகளில் பெய்த திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். #rainsbringrespite #Chennairains
    சென்னை:

    தமிழ்நாட்டில் கோடைக்காலம் கடந்த பின்னரும் கத்திரி வெயில் காலம் போல் செப்டம்பர் மாதம் வரை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதற்கிடையில் தமிழகத்தின் சில பகுதிகளில் நேற்று பரவலான மழைப்பொழிவு ஏற்பட்டது.

    இந்நிலையில், இன்று பிற்பகல் மூன்று மணியில் இருந்து தென்சென்னை, வடசென்னை மற்றும் மத்திய சென்னைக்கு உட்பட்ட பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

    குறிப்பாக, செங்குன்றம், ஈக்காட்டுத்தாங்கல், கீழ்ப்பாக்கம், அண்ணாநகர், எழும்பூர், வேப்பேரி ஆகிய பகுதிகளில் சுமாரான மழைப்பொழிவு உள்ளது. இந்த மழையால் தட்பவெப்ப நிலையில் இருந்த வெப்பம் மாறி, குளிர்ச்சியான சீதோஷ்ணம் நிலவிவதால் சென்னைவாசிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இன்று மாலை சுமார் 7 மணிவரை மழை தொடர்ந்து நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ள தகவல் அவர்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியுள்ளது. #rainsbringrespite #Chennairains
    ×